"இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்று நாள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்று நாள்!
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து நியாயமான தொகுதி வரையறை குறித்தான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்திற்கு எங்களுடன் இணைந்துள்ள தலைவர்களுக்கு எனது அன்பான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்ச் 5 ஆம் தேதியன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 58 அரசியல் கட்சிகள் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நியாயமான தொகுதி வரையறைக்காக ஒன்றிணைந்த ஒரு முக்கிய தருணமாகும்.
இந்த அபரிமிதமான கருத்தொற்றுமை ஜனநாயகம் மற்றும் நீதிக்கான தமிழ்நாட்டின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலித்தது. இந்த வரலாற்று ஒற்றுமையைக் கட்டியெழுப்ப, நமது எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களின் தலைவர்களை சந்தித்து, நமது கூட்டு முயற்சியின் உறுதியை வலுப்படுத்தினர்.
தமிழ்நாட்டின் முன்முயற்சியாகத் தொடங்கியது இப்போது ஒரு தேசிய இயக்கமாக வளர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தை கோருவதற்கு கைகோர்த்து வருகின்றன.
நமது கூட்டுப் பயணத்தில் இது ஒரு முக்கியமான தருணம். இது ஒரு சந்திப்பு என்பதை விட மேலானது. இது நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு இயக்கத்தின் ஆரம்பம். ஒன்றாக இணைந்து, நியாயமான தொகுதி வரையறை என்பதை அடைவோம்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.