தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
அச்சன்கோவில் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவ விழாவின் தேரோட்டம் மற்றும் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்றது.
ஐயப்பனின் ஆறுபடை கோயில்களில் ஒன்றான அச்சன்கோவில் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் மண்டல மகோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு மண்டல மகோற்சவ திருவிழாவானது கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, கேரள மாநில பாரம்பரிய முறைப்படி வீதி உலா நடைபெறும்.
அதன்படி திருவிழாவின் 9வது நாளான நேற்று தேரோட்டம் மற்றும் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பாரம்பரிய கிராமிய இசையான நாதஸ்வரம், தவில் இசையில் நடைபெற்ற கருப்பன் துள்ளல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்நாட்டில் இரும்பு சங்கிலியால் தேரை இழுப்பது போன்று அல்லாமல், இங்கு மூங்கிலை வளைத்து திருத்தேரினை பக்தர்கள் இழுத்து வழிபட்டனர்.