ரசிகர் கொடுத்த பரிசால் நெகிழ்ந்த லூலூ மால் தலைவர் யூசுப் அலி - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
லூலூ மாலின் தலைவர் யூசுப் அலிக்கு அவரது தாயின் புகைப்படம் பொருத்தப்பட்ட கைக் கடிகாரம் ஒன்றை அவரது ரசிகர் ஒருவர் பரிசாக அளித்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலி முசாலியம் விட்டில் அப்துல் காதர். இவர் இந்தியாவை தாண்டி உலகளவில் பல நாடுகளில் வணிகத்தை கொண்டுள்ள லூலூ குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார். யூசுப் அலிக்கு வயது 68.
லூலூ குரூப் இன்டர்நேஷனல் என்ற பெயரில் அழைக்கப்படும் லூலூ குழுமம் ஐக்கிய அரபு அமீகரத்தின் தலைநகரான அபுதாபியை தலைமையிடமாக கொண்டு ஹைப்பர் மார்க்கெட் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களை உலகம் முழுவதும் அமைத்துள்ளது. உலகம் முழுவதும் 239 இடங்களில் செயல்படும் மால் இந்தியாவில் பல்வேறு நகங்களில் திறக்கப்பட்டுள்ளது.
அண்மையில் யூசுப் அலி இல்ல திருமண விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதி அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல் மரி உள்ளிட்ட தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் அமீரகம் சென்ற போது, அவரை யூசுப் அலி தனது Rolls Royce காரில் அமீரகத்தை சுற்றிக் காட்டினார். ரஜினியும், யூசுப் அலியும் பல ஆண்டுகளாக நட்புடன் பழகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அபுதாபியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கேரளாவில் நடைபெற்ற தனது குடும்ப திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவர் யூசுப் அலிக்கு அவரது தாயின் புகைப்படம் அடங்கிய கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார். இதுகுறித்து வெளியான வீடியோவில் அபுதாபியை சேர்ந்த தொழிலதிபர், “உங்கள் அம்மாவைப் பற்றி நீங்கள் பேசும் வீடியோவைப் பார்த்தேன். நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள். இது அம்மாவை மிகவும் நேசிக்கும் ஒருவருக்காக. இது வாட்டர் ப்ரூஃப் வாட்ச்” என தெரிவித்தார்.
அதற்கு யூசுப், “நான் மட்டுமல்ல. எல்லோரும் தங்கள் தாயை நேசிக்கிறார்கள். உலகில் தாயை நேசிக்காதவர் யார்?” என தெரிவித்தார். பின்னர் கைக்கடிகாரத்தை கொடுத்து, யூசுப் அலியிடம் அந்த தொழிலதிபர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 2001-ம் ஆண்டு கார் விபத்தில் யூசுப் அலி தனது பெற்றோர் இருவரையும் இழந்தார். அவர்கள் துபாயில் இருந்து அபுதாபிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.