“முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்படும்..” - முதலமைச்சர் #MKStalin உருக்கம்!
மறைந்த முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, திராவிட இயக்கம் சார்ந்த படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் திமுக முப்பெரும் விழாவில் ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மறைந்த முரசொலி செல்வத்தின் படத்திறப்பு நிகழ்ச்சி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது. இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, நீர்வளத் துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலருமான துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி., மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி , முரசொலி செல்வத்தின் படத்தை திறந்து வைத்தார். இந்த விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும் போதே கண்கலங்க கனகனத்த குரலில் பேசினார். அவர் பேசியதாவது,
“இந்த மைக் முன்னாள் நின்று பேசலாமா அல்லது தவிர்த்து விடலாமா என்கிற இக்கட்டான சூழ்நிலையில், மனக்குழப்பத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பேசினால் திரும்ப வந்துவிடப்போறாரா? என்கிற ஆதங்கமும் எனக்கு உள்ளது. கடந்த அக். 10-ம் தேதி முரசொலி செல்வம் இறந்த செய்தியை தயாநிதி தான் எனக்கு சொன்னார். நம்பவே முடியவில்லை. அவருக்கு எந்த உடல்நலக்கோளாறும் கிடையாது. இப்படிப்பட்டவர் மறைந்துவிட்டார் என நம்ப முடியவில்லை.
அவர் மறைந்ததற்கு முதல்நாள் மாலை என் தங்கை செல்வியிடம் பேசியிருக்கிறார். கலாநிதிமாறன், எழிலரசி, தமிழரசன் எல்லோரிடமும் ஏன் என்னிடமும் பேசினார். நாளை நான் புறப்பட்டு சென்னைக்கு வருகிறேன் என்று கூறினார். சென்னை வந்தார், ஆனால் அவர் உயிருடன் வரவில்லை அவர் உடல் மட்டும் தான் வந்தது. பேச வார்த்தை இல்லாமல் திகைத்து நிற்கிறேன். அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை அண்ணா என்று தான் அழைப்போம். எங்களுக்கெல்லாம் மூத்தவராக இருந்தவர்.
முரசொலி செல்வம் மறைந்த பிறகு மனசு சுக்கு நூறாக உடைந்து விட்டது. அதிலிருந்து எப்படி மீள போகிறேன் என்று தெரியவில்லை. பள்ளி பருவத்து காலத்தில் இருந்தே எனக்கு துணையாக இருந்தவர். எப்படி கூட்டம் நடத்த வேண்டும், எப்படி பேச்சாளர்களை அழைத்து வர வேண்டும், எப்படி நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்பதையெல்லாம் எனக்கு கற்றுக் கொடுத்தவர். இளைஞர் அணியில் நான் பொறுப்பேற்ற போது எனக்கு துணை நின்று என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர்.
பெங்களூரில் குடி பெயர்ந்து விட்டாலும் மாதத்துக்கு ஒரு முறையாவது சென்னை வந்து விடுவார். வரும்பொழுது அந்த செய்தியை எனக்கு சொல்லிவிடுவார். அவர் சென்னைக்கு வந்துவிட்டால் அந்த நாள் மாலையே நான் உட்பட கட்சி முன்னணியினர் அவரைப் பார்க்க சென்று விடுவோம். பல மணி நேரம் பேசுவோம். சென்னையில் இருந்து எங்களுக்கு தெரியாத பல விஷயத்தையும் பெங்களூரில் இருந்து எங்களுக்கு சொல்லக்கூடியவர்.
நான் பங்கேற்கும் கூட்டங்களில் நான் பேசுவதை முழுமையாக பார்ப்பார். பார்த்த பிறகு முதல் ஃபோன் அவரிடம் இருந்துதான் வரும். அவர் போன் பண்ணாவிட்டாலும் நான் பண்ணி விடுவேன். நான் பேசியதில் குறை நிறைகளை எனக்கு அறிவுரை வழங்குவார். முரசொலி செல்வம் பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்படும். அறக்கட்டளை மூலம் திராவிட இயக்கத்தை சார்ந்த படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படும். அந்த பரிசு ஒவ்வொரு ஆண்டும் திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.