உண்மைச் சம்பவ அடிப்படையில் உருவான ‘நரிவேட்டை’ திரைவிமர்சனம்!
கேரள மாநிலம் வயநாடு காட்டுபகுதியில் பகுதியில் பழங்குடி மக்கள் தங்களின் நிலம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்காக போராட்டங்கள் நடத்துகிறார்கள். அதை ஒடுக்க நினைக்கிறது அரசு. அங்கே பாதுகாப்பு பணிகளை போலீஸ் அதிகாரி சேரன் தலைமையிலான டீம் கண்காணிக்கிறது. அதில் வந்து சேருகிறார் போலீஸ்காரரான டொவினோதாமஸ். போராட்டம் நீடித்துக்கொண்டே போக, வழக்கம் போல சில வேலைகளை அரசும், போலீஸ் அதிகாரிகளும் செய்ய ‘கலவரம்’ வெடிக்கிறது. அப்போது என்ன நடந்தது. சாதாரண போலீஸ்காரரான டொவினோ என்ன செய்தார். எப்படி பாதிக்கப்பட்டார். அந்த மக்களுக்கு நீதி கிடைத்ததா என்பது நரி வேட்டை படக்கரு. அபின் ஜோசப் கதை, திரைக்கதை எழுத, அதை இயக்கியுள்ளார் அனுராஜ் மனோகர். இப்படம் மலையாளம், தமிழில் வெளி வந்துள்ளது.
கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவம் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. வேலை இல்லாமல் சுற்றுவது, காதலி தோல்வி, பிடிக்காத வேலை என்று சுற்றி திரியும் டொவினோவுக்கு , இன்னொரு போலீஸ்காரரான சுராஜ்வெஞ்சமூடு நண்பனாக இருக்கிறார். நிறைய அட்வைஸ் செய்கிறார். காட்டுக்கு ரோந்து செல்லும் அவர் மர்மமான முறையில் கொல்லப்பட கதை சூடு பிடிக்கிறது. அப்போது அவர் துடிக்கும் காட்சி உணர்ச்சி பூர்வமானவை. பின்னர், ஒரு கோபக்கார இளைஞனாக வாழ்ந்து இருக்கிறார் டொவினோ. அரசு, உயர் அதிகாரிகள் விருப்பப்பட காவல்துறை எப்படியெல்லாம் மாறுகிறது. அப்பாவி மக்கள், தங்கள் உரிமைக்காக போராடும் மக்களை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள். ஆதிவாசி மக்களின் பரிதாப நிலை என பல விஷயங்களை படம் விவரிக்கிறது.
நண்பரின் இழப்பு, அவமானம், எதையும் செய்ய முடியாத சூழல் போன்ற நிலையில், பண்பட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார் டொவினோ. அதிக ஹீரோயிசம் இல்லாத கதை என்றாலும், கதைதான் ஹீரோ என்று அவர் நடித்து இருப்பது சிறப்பு. போலீஸ் அதிகாரியாக வரும் சேரன் ஆரம்பத்தில் நல்லவர் போல தெரிந்தாலும், பிற்பாடு அவர் குணம் மாறுகிறது. இதுவரை சேரன் நடித்திராத கேரக்டர் அது. தனது கொள்கைக்கு பொருந்தாத கேரக்டர் என்றாலும், இந்த கதைக்காக அவர் மாறியிருப்பது சிறப்பு. இன்னொரு போலீஸ்காரராக வரும் சுராஜ் நடிப்பும் அருமை. பாதிக்கப்பட்ட மலை மக்களின் பிரதிநிதி, பெண் போராளி , அந்த குழந்தை என அனவைரும் மனதில் நிற்கிறார்கள். பாதிக்கப்பட்டு தீ பிழம்புடன் ஓடி வரும் ஒரு நாய் கூட நம் மனதை பிசைகிறது.
வயநாடு அழகு, போராட்டங்களின் பின்னணி என அனைத்தை சிறப்பாக காண்பித்து இருக்கிறது விஜய் கேமரா. இன்றைய காலகட்டத்தில் அடிப்படை உரிமைக்காக போராடும் மக்களின் நிலை. குறிப்பாக, காடுகளில் பல ஆண்டுகளாக வாழ்பவர்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் நிலை, அவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் தந்திரம், அரசின் அடியாளாக இருக்கும் போலீசின் இன்னொரு முகம். பாதிக்கப்பட்ட மக்களின் பரிதாப நிலை, அவர்களுக்காக போராடும் அமைப்பு
என பல விஷயங்களை படம் விரிவாக சொல்கிறது. சில காட்சிகள் மெதுவாக நகர்வது, சில இடங்களில் சலிப்பு இடைவேளைக்குபின் கதை இன்னும் சூடு பிடிக்கிறது. கிளைமாக்ஸ் ஒருவித ஆறுதலை தருகிறது.
கடைசியில் அனைத்தும் கை விட்ட போன நிலையில், இந்த நாட்டில் நீதி கிடைக்க கோர்ட் இருக்கிறது. அங்கே சில நல்லவர்கள் இருக்கிறார்கள். தவறு செய்பவர்களுக்கு தண்டனை நிச்சயம் என்ற கரு வரவேற்கப்பட வேண்டியது. எப்போது கதையமைப்பு, நடிகர்கள், மெசேஜ் ஆகிய விஷயங்களில் மலையாள சினிமா தனித்து தெரியும். நரி வேட்டையிலும் அது தெரிகிறது. இந்த கருவை யோசித்த எழுத்தாளர், படமாக்கிய இயக்குநரை, கமர்ஷியல் விஷயம் பற்றி கவலைப்படாமல் நடித்தவர்களை பாராட்டலாம். இனி, வயநாடு சென்றால், வயநாடு பற்றி கேட்டால், பார்த்தால் கண்டிப்பாக நரி வேட்டை படம் நினைவுக்கு வரும்