“ #Rajinikanth போன்ற ஒரு நடிகரை விட எனக்கு படம் முக்கியமில்லை” - லோகேஷ் கனகராஜ் அளித்த விளக்கம்!
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் பேசியது குறித்தும், அவர் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது குறித்தும் 'கூலி' படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இரவு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். மருத்துவமனை நிர்வாகம் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து 'இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் அறுவை சிகிச்சை இல்லாமலேயே சரிசெய்யப்பட்டு விட்டது. ரத்தநாளத்தில் ஏற்பட்ட அழுத்தத்திற்கு stent பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்' என தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.
ரஜினி 'வேட்டையன்' படத்தை முடித்துவிட்டு, லோகேஷின் 'கூலி' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து நேற்று (அக். 4) படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,
“மருத்துவமனையில் ஒரு சின்ன சிகிச்சை பண்ண வேண்டியது இருக்கிறது என 40 நாட்கள் முன்னாடியே ரஜினி சார் எங்களிடம் சொல்லிவிட்டார். அதன்பிறகு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவர் எங்களிடம் முன்கூட்டியே எல்லாவற்றையும் சொல்லிவிட்டதால், நாங்கள் அச்சப்படவில்லை. அதனால்தான் நாங்கள் சென்னை வந்து அவரை நேரில் பார்க்கவில்லை. அவர் இல்லாத காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தோம். ஆனால், ஊடகங்களில் வேறு விதமாக பேசப்பட்டது எங்களுக்கு வருத்தம் அளித்துள்ளது. ரஜினிகாந்த போன்ற ஒரு நடிகரை விட எனக்கு படம் முக்கியமில்லை.
யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சிலர் பேசுவதை பார்த்து நாங்களே பயந்துவிட்டோம். அவர்கள் சொல்வது போல படப்பிடிப்பில் ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் நாங்கள் ஒட்டுமொத்த படக்குழுவும் இங்கே மருத்துவமனை வாசலில்தான் நின்றிருப்போம். ரஜினி எல்லாவற்றையும் முன்கூட்டியே எங்களிடம் சொல்லிவிட்டார். அதனால்தான் சென்னைக்கு வராமல் படப்பிடிப்பைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தோம். ஆனால், அவர் உடல்நலம் குறித்து யூடியூப்பில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசியது கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது. எதோ பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல பேசினார்கள். ரஜினி நலமுடன் இருக்கிறார். ஆண்டவன் அருளால் அவர் என்றும் நலமுடன் இருப்பார்” இவ்வாறு தெரிவித்தார்.