#WeatherUpdate | அக்டோபர் 17-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை கடற்கரையை கடக்கும்!
சென்னைக்கு அருகே நிலவ போகும் காற்றழுத்தம் புயலாக மாறுமா என்பது குறித்து தற்போது சொல்ல முடியாத நிலை இருந்தாலும் அந்த காற்றழுத்தமானது எங்கே கரையை கடக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை ஏதேனும் ஒரு நாளில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழையை கொடுக்கும் மிக பெரிய நாளாக விளங்க போகிறது.
காற்றழுத்தத்தின் மேற்கு பகுதியில் குவிந்துள்ள வெப்பச்சலனமானது வடதமிழகம், தென் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மிக அடர்த்தியான மேகக் கூட்டங்களை உருவாக்கும். இந்த மழையை நாம் மிக்சாங் புயலின் தாக்கத்தோடு ஒப்பிடுதல் கூடாது. மிக்சாங் புயல் போல் இது 24 மணி நேரத்தில் முடிய கூடியது இல்லை.
இந்த அக்டோபர் மாத மழையானது 4 நாட்களுக்கு மேல் பரவி இருக்கும். கடற்கரையில் காற்றழுத்தம் கரையை கடக்கும் போது அடர்ந்த மேகக் கூட்டங்கள் உருவாகும். இந்த காற்றழுத்தம் சென்னை முதல் நெல்லூர் கடற்கரை அல்லது புதுச்சேரி முதல் சென்னை கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த இரு தடங்களில் எங்கு கரையை கடந்தாலும் சரி, கனமழை இருக்க போவது உறுதி. என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், தாழ்வான இடங்களில் 100 மி.மீ. மழை வரை பெய்தால் சென்னையில் ஓரளவுக்கு தாங்கலாம். அதே வேளையில் ஒரு நாளைக்கு 200 மி.மீ மழை பெய்தால் எல்லாமே சரியாக இருக்கும் என சொல்ல முடியாது.
சென்னையில் 100 டூ 150 மி.மீ. மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் 5 முதல் 6 மணி நேரம் வரை தண்ணீர் தேங்கியிருக்கும். 200 டூ 250 மி.மீ. மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் ஒரு நாள் முழுக்க தண்ணீர் தேங்கியிருக்கும். 300 டூ 350 மி.மீ. மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் 2 முதல் 3 நாட்களுக்கு தண்ணீர் தேங்கியிருக்கும்.
400 டூ 250 மி.மீ. மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் மிக்சாங் புயல் போல் 5 நாட்கள் வரை மழை நீர் தேங்கியிருக்கும். இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க சென்னைக்கு 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சென்னை ரிப்பன் மாளிகையில் வார் ரூம் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 83 கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் உள்ளன. பணிகளை மேற்பார்வையிட பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மக்கள் அவர்களுடைய செல்போன், எலக்ட்ரானிக் கருவிகளை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும் நாளை, நாளை மறுநாள் அதீத கனமழை என சொல்லப்பட்டுள்ளதால் மக்கள் பொருட்களை வாங்க சூப்பர் மார்கெட் பகுதிகளில் குவிந்து வருகிறார்கள். சென்னையில் முகப்பேர், மந்தைவெளி, மயிலாப்பூர், லஸ், சாந்தோம், மெரினா, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆவடி, தாம்பரம், மாங்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை பெய்தது.