“தேர்தல் முடிவுற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்” - திமுக எம்.பி. வில்சன்!
தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் முடிவுற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மாற்றுவது அல்லது தளர்த்துவது குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
இதனிடையே தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறை ஜூன் 4-ம் தேதி வரை அமலில் இருக்கும். ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகும் வாகன சோதனை தொடரும். எனவே உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஜூன் 4-ம் தேதி வரை தொடரும்” என தெரிவித்திருந்தார்.
ஜூன் 4 வரை மாநில அரசின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது உரிய காரணங்கள் ஏதுமின்றி ஜனநாயகத்தை முடக்குவது மற்றும் மக்களை தண்டிப்பது போன்றதாகும். தற்போதைய சூழ்நிலையில் மாநிலத்திற்குள் ரூ.50,000 க்கு மேல் மக்கள் பணம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளைத் தொடரும் முடிவானது மிகவும் தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றதாகத் தோன்றுகிறது..
எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மாற்றுவது அல்லது தளர்த்துவது குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையர்கள் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று ஒரு குடிமகன் என்ற முறையில் நான் வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.