கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட சத்துமாவு பாக்கெட்டில் இறந்த பாம்பு!
மகாராஷ்டிர மாநிலத்தில் கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கன்வாடிகளில் சத்துணவு திட்டத்தின்கீழ் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு பொட்டலம் செய்யப்பட்ட சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மகாராஷ்டிரா சங்கிலி மாவட்டம் பாலஸ் பகுதிக்குள்பட்ட அங்கன்வாடி ஒன்றில் கடந்த திங்கள்கிழமை கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட சத்துமாவு பொட்டலத்தில் இறந்த நிலையில் சிறிய வகை பாம்பு கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து அங்கன்வாடியில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், சங்கிலி மாவட்ட ஆட்சியர் ராஜா தயாநிதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சமந்தப்பட்ட அங்கன்வாடியில் ஆய்வு நடத்தி உணவை ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே பாலஸ் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் விஸ்வஜித் கடாம், அம்மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில், இப்பிரச்னையை எழுப்பியுள்ளார்.
முன்னதாக, தானிய வகை உணவுகள் தனித்தனியாக கொடுக்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் கலவை உணவுகள் வழங்க தொடங்கியுள்ளதாகவும், தரமில்லாத உணவுகளை அந்நிறுவனம் வழங்குவதாகவும் விஸ்வஜித் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.