நீட் தேர்வு முறைகேடு புகார்: குழு அமைத்து விசாரணை என மத்திய அரசு அறிவிப்பு!
நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும் என மத்திய உயர் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
நீட் மறுதேர்வு நடத்த வலியுறுத்தி சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார், க ருணை மதிப்பெண் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு, இதுவரை இல்லாத அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவைகளை சுட்டிக்காட்டி மறுதேர்வு நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி டெல்லியில் இன்று செய்தியாளரகளை சந்தித்ததார். அப்போது அவர் தெரிவித்ததாவது..
“ நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். கருணை மதிப்பெண் வழங்கியதால் தான் அதிக மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றனர். தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படும்” என சஞ்சய் மூர்த்தி தெரிவித்தார்.