சொகுசு காருக்குள் புகுந்த நாகப்பாம்பு... கார் பாகங்களை தனித்தனியாக பிரித்தும் சிக்காத பாம்பு!
சீர்காழியில் சொகுசு காரில் புகுந்த நாகப்பாம்பினை பிடிக்க காரின் பல பாகங்களை அகற்றி, சுமார் 4 மணி நேரம் போராடியும் பாம்பை பிடிக்க முடியாமல் போனதால் காரின் உரிமையாளர் கவலை அடைந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் ஆச்சாள்புரம் மேல வீதியை சேர்ந்தவர்
பாலாஜி. இவர் வீட்டு அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரினை எடுக்க முயன்றபோது
அதில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து சீர்காழியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சுமார் நான்கடி நீளம் உள்ள நாகப்பாம்பு எஞ்சின் பகுதி அருகே தென்பட்டது. தொடர்ந்து, பாண்டியன் பாம்பை பிடிக்க முயன்ற போது, பாம்பு அங்கிருந்து காரின் இருக்கை பகுதிக்கு நகர்ந்தது. காரில் இருக்கைகள் மற்றும் அதன் கீழ் இருந்த மேட்டுகள் என காரின் ஒவ்வொரு பாகத்தையும் அகற்றி, சுமார் 4 மணி நேரம் போராடியும் பாம்பை பிடிக்க முடியவில்லை.