"மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சம் மதிப்பில் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் திறந்து வைத்தார்.
மேலும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். திருவுருவச் சிலையை திறந்து வைத்த பின் வி.பி.சிங்கின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் வி பி சிங்கின் குடும்பத்தினர் சிலைக்கு முன் குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
உயர் சாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக்குள் வைத்தானா என பேசி இருந்தார். இப்போது கூட கலைவாணர் அரங்கில் கலைஞர் பேசிய வெப்பத்தை உணர முடிகிறது. வி.பி.சிங்கின் தாய் வீடு உத்திரப்பிரதேசம் எனில் தந்தை வீடு தமிழ்நாடு. 1988 தேசிய முன்னணியின் தொடக்க விழா சென்னையில் நடந்த போது, இளைஞர் அணி சார்பில் ஊர்வலத்தை தலைமை தாங்கி நான் நடத்தி வந்தேன். அப்போது வி.பி.சிங்கிடம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் பிரதமரானவுடன் டெல்லிக்கு சென்று அவரை சந்தித்த போது, என்னை அறிமுகம் செய்து வைத்தனர்.
என்னை அறிமுகப்படுத்திய போது, என்னை எப்படி மறக்க முடியும் என அணிவகுப்பை சுட்டிக்காட்டி பேசியது என்னால் மறக்க முடியாது. வி.பி.சிங் குடும்பத்தினர் என உங்களை அழைக்க விரும்பவில்லை, அப்படி அழைத்தால் நாங்கள் யார் நாங்களும் அவரது குடும்பத்தினர் தான். சிலை திறப்பின் மூலம் அவருக்கு நன்றியை காட்டி உள்ளோம்.
இன்று பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு அடியாவது முன்னேறியத்தற்கு வி.பி.சிங் தான் காரணம். 45 மத்திய பல்கலைகழகங்களில் பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் வெறுமனே 4% பேர் தான். நீதிமன்றங்களில் 2018-2023 காலகட்டம் வரை 604 நீதிபதிகளில்
458 பேர் பொது பிரிவை சார்ந்தவர்கள். இந்த நிலை மாற்ற தொடர்ந்து உழைக்க வேண்டும். அந்த பணியில் திமுக ஒரு போதும் சோர்ந்து போகாது. தமிழ்நாட்டில் சமூக நீதியை கண்காணிக்க குழு அமைத்துள்ளோம்.
நீட்டை நீக்க சட்ட போராட்டம் மற்றும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கலைஞரை சொந்த சகோதரன் போல் மதித்தவர் வி.பி.சிங். முதன் முதலாக தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் தமிழ்நாட்டில் நடந்தது வரலாறு. கோரிக்கையை எடுத்துக் கொண்டு டெல்லி வர வேண்டாம், தமிழ்நாட்டில் இருந்து சொன்னாலே போதும் என்றார் வி.பி.சிங். அது போன்ற காலம் மீண்டும் வர வேண்டும், அது நாம் ஒன்றிணைந்தால் முடியும். சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் அது மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.