புறாக்கள் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசார் நடவடிக்கை!
மத்திய பிரதேசத்தில் 28 புறாக்களை கொன்ற நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரின் சிந்தியா நகரைச் சேர்ந்தவர் காஜல் ராய். இவர் தனது வீட்டின் மாடியில் 50 க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வந்தார். இதனால் அவருக்கும் அவரின் பக்கத்து வீட்டு காரரான மோஹித் கான் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 8 ) இரவு காஜல் ராயின் வீட்டின் மேலே இருந்து சத்தம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மேலே சென்று பார்த்தார். அவர் மேலே வருவதை பார்த்த மோஹித் கான் அங்கிருந்து தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த காஜல் புறா கூட்டை சென்று பார்த்தார். அப்போது கூட்டில் இருந்த 28 புறாக்கள் கொடுரமான முறையில் இறந்துகிடந்தன. மீதமிருந்த புறாக்கள் பயத்தில் பதுங்கி இருந்தன.
இது குறித்து அவர் குவாலியர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். பின்னர் காவல் துறையினர் வன துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வன துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்த புறாக்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
உடற்கூராய்வின் படி, புறாக்கள் கழுத்து உடைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பின்னர் இறந்த புறாக்களின் உடலை அவர்கள் குழி தோண்டி புதைத்தனர். இதனையடுத்து, மோஹித் கானின் மீது விலங்குகளை துன்புறுத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலை மறைவாக இருக்கும் அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.