சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த விவகாரம்: சென்னை பூங்காக்களில் புதிய கட்டுப்பாடு!
சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 வயது சிறுமியை ராட்வீலர் என்ற வீட்டு வளர்ப்பு நாய் கடித்த விவகாரம் எதிரொலியாக, பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் 4வது லேன் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவின் காவலாளி மற்றும் பாரமரிப்பாளராக பணியில் இருப்பவர் ரகு. இவர் தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுரக்ஷாவுடன் பூங்காவில் உள்ள ஒரு சிறு அறையில் தங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் (மே 5) ரகு தனது சொந்த ஊரான விழுப்புரத்துக்குச் சென்றுவிட்டார். இதனால் பூங்காவில் சோனியா, மகள் சுரக்ஷா மட்டும் இருந்துள்ளனர். அன்று மாலை பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவரின் வீட்டில் இருந்து வெளியேறிய அவரது 2 வளர்ப்பு நாய்கள் பூங்காவுக்குள் நுழைந்துள்ளன. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுரக்ஷா மீது இந்த நாய்கள் திடீரென வெறி பிடித்ததுபோல் பாய்ந்து கடிக்கத் தொடங்கின. குழந்தையின் கை, கால் என உடல் முழுவதும் சரமாரியாக கடித்து குதறியதில் ரத்தம் சிந்தி சிறுமி அலறி துடித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆயிரம் விளக்கு போலீஸார் நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை விசாரித்தனர். பின்னர் அவர் மீதும், அவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் மகன் மருத்துவர் வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் எதிரொலியாக, சென்னையில் உள்ள பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில்,
- “உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்கள் மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும்.
- வளர்ப்பு நாய்களுக்கு கழுத்துக்கு சங்கிலி போட்டும், வாயை மூடியும் அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே பூங்காவிற்குள் அனுமதி அளிக்க வேண்டும்.
- பூங்காவிற்குள் உள்ள குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை.
- ஒருவர் ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே பூங்காவிற்கு கொண்டுவர வேண்டும்.
- இவை அனைத்தையும் அந்த பூங்காவின் காவலர் கடுமையாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும்”
போன்ற விதிகள் இடம் பெற்றுள்ளன.