ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை - மீட்பு பணிகள் தீவிரம்!
ராஜஸ்தானில் 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீப காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது தொடர்கதையாகி வருகிறது. அவ்வாறு விழுந்த ஒருசில குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டாலும் பல நேரங்கில் குழந்தைகள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதனை தடுக்க பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றை அப்படியே விடாமல் மூடுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதுபோன்ற சம்பவம் தற்போது ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்பூட்லி நகர் அருகே உள்ள சரூந்த் கிராமத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு அருகே சுமார் 700 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று பாசனத்திற்காக தோண்டப்பட்டது. தொடர்ந்து நீர் ஊராதநிலையிலும் ஆழ்துளை கிணறுமூடப்படாமல் திறந்து கிடந்துள்ளது.
இந்தநிலையில் அங்கு விளையாடி கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை ஒன்று எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போராடி வருகின்றனர். 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.