பட்டாம்பூச்சியால் உயிரிழந்த 14 வயது சிறுவன்?... பிரேசிலில் அதிர்ச்சி மரணம்!
பிரேசிலில் இறந்த பட்டாம்பூச்சியினை தண்ணீரில் போட்டு கலக்கி, அந்த கலவையை ஊசிமூலம் செலுத்தியதில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் விட்டோரியா டா கான்கிஸ்டாவைச் சேர்ந்த 14 வயது இளம் சிறுவன் டேவி நூன்ஸ் மொரேராவின் காலில் தீடிரென காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து சிறுவனின் தந்தை கேட்டதற்கு விளையாடும்போது ஏற்பட்டதாக தெரிவித்துள்ளான். ஆனால் அவனது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிறுவனின் தந்தை சேர்த்துள்ளார்.
பின்னர் அவனது தந்தை தலையணைக்கு அடியில் ஒரு சிரிஞ்சைக் கண்டுபிடித்தார். தொடர்ந்து சிறுவனிடம் கேட்டதில், இறந்த பட்டாம்பூச்சி மற்றும் தண்ணீரின் கலவையை தனக்குத்தானே ஊசி மூலம் செலுத்திக் கொண்டதாக கூறியுள்ளான். இதனையடுத்து தொடர் வாந்தி மற்றும் உடல் உறுப்புகள் இயக்கம் நின்று சிறுவன் உயிரிழந்தான்.
சிறுவனின் இறப்பு குறித்து கூறும் மருத்துவர்கள் அவனுக்கு எம்போலிசம், இரத்த நாளத்தில் அடைப்பு அல்லது அந்த பட்டாம்பூச்சி கலவையால் ஒவ்வாமை இருந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இருப்பினும், மரணத்திற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. பிரேத பரிசோதனை நிலுவையில் உள்ளது.
சாண்டா மார்செலினா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் லூயிஸ் பெர்னாண்டோ டி. ரெல்வாஸ், ஊசி போடப்பட்ட சரியான கலவை பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை என்று குறிப்பிட்டார். சிரிஞ்சில் காற்று இருந்திருந்தால், அது ஒரு அபாயகரமான எம்போலிசத்தை ஏற்படுத்தியிருக்கலாம், இது திடீர் மரணத்திற்கு வழிவகுக்கும், இரத்த நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
சிறுவன் “இந்த கலவையை எவ்வாறு தயாரித்தார் அல்லது எவ்வளவு அளவு தண்ணீரை உடலில் செலுத்தினார் என தெரியவில்லை” என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக பட்டாம்பூச்சிகள் பாதிப்பில்லாதவை. ஆனால், மோனார்க் பட்டாம்பூச்சி போன்ற சிலவற்றில், நச்சுகள் உள்ளன. இந்த நச்சுப் பொருட்களை மனித இரத்த ஓட்டத்தில் செலுத்துவதால் ஏற்படும் விளைவுகள குறித்து இன்னும் ஆய்வுகள் செய்யப்படவில்லை. இதனால் சிறுவனின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை முடிவுகள் மரணத்திற்கான காரணத்தை தெளிவுபடுத்த உதவும். என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக விட்டோரியா டா கான்கிஸ்டாவில் உள்ள சிவில் காவல்துறை தெரிவித்துள்ளது.
வைரலான ஆன்லைன் சேலஞ்சில் சிறுவன் பங்கேற்றதாகவும் தெரியவந்துள்ளது. அதில் கூறிதான் இவ்வாறு செய்தானா? எனும் கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.