2023ல் 99பத்திரிகையாளர்கள் பலி - பாலஸ்தீனத்தில் மட்டும் 74பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்!
2023ம் ஆண்டில் மட்டும் 99பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனத்தில் மட்டும் 74பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,663-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 68,395 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர் துவங்கியதில் இருந்தே ஏராளமான செய்தியாளர்கள் களத்தில் இருந்து போர் தொடர்பான செய்திகளை எடுத்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில் காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் வாயில் அல் தஹ்துத், துவக்கம் முதலே போர் தொடர்பான தகவல்களை தான் பணியாற்றும் தொலைக்காட்சிக்கு வழங்கி வருகிறார். இந்தப் போரில் தஹ்துத்தின் மனைவி, இரண்டு குழந்தைகள் உட்பட அவரது உறவினர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், களத்தில் இருந்து செய்திகளை வெளியிடுவதில் இருந்து பின் வாங்காமல் தஹ்துத் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
இதேபோல பாலஸ்தீனத்தில் களத்தில் இருந்து செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்கள் கிட்டத்தட்ட 74பேர் அதிகாரப்பூர்வமாக கொல்லப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 99 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் பாலஸ்தீனத்தில் மட்டும் 74பேர் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இது பல மடங்கு அதிகம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.