கோபிசெட்டிபாளையம் அருகே தெருநாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு!
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கவுந்தப்பாடி பகுதிகளில் பெரும்பாலான
விவசாயிகள் ஆடு, மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு கவுந்தப்பாடி பொம்மன்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்தி மற்றும் குமாரசாமி என்பவர்கள் வளர்த்து வந்த பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 9 ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் குதறி உள்ளது.
இன்று காலை வழக்கம் போல பட்டிக்குச் சென்று பார்த்தபோது பட்டியில் அடைத்து
வைக்கப்பட்டிருந்த 8 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. 1 ஆடு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி இருந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உயிரிழந்த ஆடுகளை வாகனத்தில் ஏற்றி அய்யம்பாளையம் பிரிவு அருகே கோபி - ஈரோடு சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், ஆடுகளை அவ்வப்போது கடித்து கொள்ளும் நாய்களை கட்டுப்படுத்த கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த கவுந்தப்பாடி காவல் துறையினர், பவானி தாசில்தார் சித்ரா, பவானி சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பண்ணன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும், தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.