தேசிய பளுதூக்கும் போட்டிக்கு தேர்வான 82 வயது பாட்டி!.. குவியும் பாராட்டுகள்!
கோவையை சேர்ந்த 82 வயதான மூதாட்டி தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்து கவுண்டர் அவன்யுவில் வசித்து வரும் வெங்கட்ராமன் என்பவரின் மனைவி கிட்டம்மாள் (82). இவரது மகள் தேவி மற்றும் பேரன்கள் ரித்திக், ரோஹித் ஆகியோர் பல்லடம் மகாலட்சுமி அவன்யூவில் வசித்து வருகின்றனர். ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
வார இறுதி நாள்களில் பாட்டி கிட்டம்மாள் பல்லடத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வரும்போது தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு தானும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசைபட்டுள்ளார். இதனையடுத்து இரண்டு பேரன்களின் உதவியால் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் பேரன்களோடு உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்றுள்ளார்.
இந்த போட்டியில் பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற பாட்டி கிட்டம்மாள் 50 கிலோ எடையை தூக்கி முதல் முயற்சியிலேயே ஐந்தாம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். இந்நிலையில் மும்பையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க கிட்டம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாதனைக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பாட்டி கிட்டம்மாளுக்கு சமூக வலைதளங்களிலும், உடற்பயிற்சி கூடத்திலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.