பிரபல நடிகர்கள் No சொன்ன 8படங்கள் - ஹிட் கொடுத்து சாதித்துக் காட்டிய விஜய்!
பிரபல நடிகர்கள் வேண்டாம் என்று சொன்ன படங்களை ஹிட் கொடுத்து சாதித்துக் காட்டிய விஜய்யின் 8படங்களை குறித்து விரிவாக காணலாம்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் கதாநாயகர்களில் நடிகர் விஜய்க்கு எப்போதுமே முதலிடம் உண்டு. நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்த இவரது பயணம் லவ்வர் பாய், ஆக்ஷன் ஹீரோ, வசூல் நாயகன் என அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி சென்று இன்று The GOAT வரை தொடர்கிறது என்றால் அது முழுக்க முழுக்க விஜய்யின் நடிப்பிற்கும், திறமைக்கும் கிடைத்த வெகுமானம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஜூன் 22 ஆன இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரகாசித்து வந்தாலும், பல ஏற்றங்களையும், சில சறுக்கல்களையும் சந்தித்துதான் இவர் இந்த நிலைக்கு வந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்தவகையில், தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள் தவறவிட்ட பல படங்களை கையில் எடுத்து அதனை தனது திரைபயணத்தின் வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றியுள்ள விஜய் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்த தொகுப்பை இங்கே காணலாம்.
பூவே உனக்காக:
விஜய்யின் சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த முதல் படம் என்றால் அது பூவே உனக்காக திரைப்படம் தான். ஒருதலை காதல் பற்றி பேசிய இந்த படம் 1996-ல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பூவே உனக்காக கிளைமாக்ஸ்
காட்சியில் விஜய் பேசும் வசனம் தற்போதும் கூட பலரால் ரசிக்கப்படக்கூடிய காட்சியாக இருந்து வருகிறது. 'காதல் என்பது பூ மாதிரி, ஒருதடவ பூ உதிர்ந்தால் மறுபடியும் எடுத்து ஒட்டவைக்க முடியாது' என விஜய் பேசிய வசனத்தை இன்றும் நினைவு கூறாத விஜய் ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது . அப்படிப்பட்ட பூவே உனக்காக படத்தில் முதலில் நடிகர் முரளி தான் ஹீரோவாக நடிக்க இருந்தாராம். ஆனால் அவர் ஏதோ சில காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகிவிட்ட பிறகு தான் விஜய்யை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் விக்ரமன். இருப்பினும் இயக்குநர் மீது வைத்திருந்த மரியாதையின் காரணமாக ஒரே ஒரு பாடலில் மட்டும் வந்து நடனமாடியிருப்பார் முரளி.
காதலுக்கு மரியாதை:
நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடம் கிடைக்க மிக முக்கியமாக அமைந்த படங்களில் ஒன்று காதலுக்கு மரியாதை. 1997 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக விஜய்க்கு அமைந்ததோடு, அவரது திரை வாழ்க்கையிலும் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. காதலுக்காக குடும்பத்தை பிரிய முடிவெடுத்த காதல் ஜோடி, மீண்டும் தனது குடும்பமும் அவர்களுடைய பாசமும் தான் முக்கியம் என காதலை தியாகம் செய்ய முடிவெடுப்பதும், அதற்கு பரிசாக கிடைக்கும் அதிரடி திருப்பமுமே படத்தின் கதை. மலையாளத்தில் வெளியான ‘அணியதிப்ராவு’ என்ற படத்தின் ரீமேக் ஆன இதில், இயக்குனர் ஃபாசில் துவக்கத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க எண்ணியது அப்பாஸை தானாம். ஆனால், நடிகர் அப்பாஸின் மேனேஜர் சரியான நிர்வாகமின்மை காரணமாக கால்ஷீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியதால் அந்த வாய்ப்பு விஜய்க்கு சென்றதாம்.
நினைத்தேன் வந்தாய்:
கடந்த 1998ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான படம் நினைத்தேன் வந்தாய். இயக்குனர் செல்வபாரதி இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தேவயானி மற்றும் ரம்பா ஆகிய இருவர் நடித்திருப்பார்கள். ஒரு முக்கோண காதல் கதையாக உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள், ஃபேமிலி செண்டிமெண்ட் காட்சிகள் , நகைச்சுவை காட்சிகள் போன்றவை அந்த சமயம் மிக பிரபலம். தெலுங்கில் வெளியான 'பெல்லி சந்தடி' படத்தின் ரீமேக் ஆன இதில், துவக்கத்தில் கதையின் நாயகனாக நவரச நாயகன் கார்த்திக் தான் நடிக்க இருந்ததாம். பின்னர் சம்பளப் பிரச்சினை காரணமாக கார்த்திக் இப்படத்தில் நடிக்காமல் போகவே, அந்த வாய்ப்பு எஸ்.ஏ.சியின் வாயிலாக நடிகர் விஜய்க்கு கிடைத்துள்ளது.
துள்ளாத மனமும் துள்ளும்:
நடிகர் விஜய் தொடர்ந்து காதல் பின்னணி கொண்ட ஃபீல் குட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், 1999ம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படமும் விஜய்க்கு மேலும் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. எழில் இயக்கிய இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் எனலாம். அப்படிப்பட்ட இந்தப் படத்தில் முன்னதாக வடிவேலுவை தான் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என இயக்குநர் எழில் முடிவு செய்திருந்தாராம். அப்போது பல தயாரிப்பாளர்கள் கதை பிடித்து போனாலும் வடிவேலுவை ஹீரோவாக போட தயங்கிய நேரத்தில், தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி அவர்கள் தான் துவக்கத்தில் முரளியை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து, இறுதியாக விஜய்யை படத்தின் கதாநாயகன் ஆகினாராம்.
பகவதி:
நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பகவதி. தொடர்ந்து காதல் படங்களாக நடித்து பல வெற்றிகளை கொடுத்து வந்த விஜய், நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு இன் அண்ட் அவுட் அக் ஷன் ஹீரோவாக தன்னை முன்னிறுத்தி நடித்த இப்படம், அந்த சமயம் நல்ல கமர்ஷியல் வெற்றி பெற்றது. அண்ணன், தம்பி பாசத்தை முன்னிறுத்தி வெளிவந்த இப்படத்தை ஏற்கனவே விஜய்யை வைத்து செல்வா, நிலவே வா போன்ற படங்களை எடுத்திருந்த இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தான் இயக்கி இருந்தார். பொதுவாகவே அந்த சமயம் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் நடிகர் சரத்குமாரை வைத்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த நேரம் என்பதால், இந்த படமும் சரத்குமாரை மனதில் வைத்துதான் அவர் கதையை உருவாக்கி இருந்தாராம். ஆனால் ஏதோ சில காரணங்களினால் அப்படம் கை மாறி விஜய் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்றதாம்.
கில்லி:
விஜய்யின் நடிப்பில் எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும் இன்று வரை ஒரு முக்கியமான மைல் கல்லாக இருக்கும் படம் என்றால் அது கில்லி திரைப்படம் தான். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த இப்படத்தில் காமெடி, காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் காமர்ஷியலாக ஒர்க் அவுட் ஆனதோடு , படத்தில் பிரகாஷ் ராஜின் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் விஜய், த்ரிஷாவின் கெமிஸ்ட்ரியும் பலரையும் கவர்ந்திருந்த்தால் அடுத்தடுத்த படங்களில் இணையும் வாய்ப்பும் இருவருக்கும் கிடைத்தது. இப்படி பல சிறப்புகளை கொண்டுள்ள இந்த படத்தில் முன்னதாக ஹீரோவாக அஜீத்தான் நடிக்க இருந்தாராம். அந்த சமயம் இயக்குனர் தரணி திரைக்கதையை எழுதி அஜீத்தை அணுகிய போது நடிகர் அஜீத், தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்க கொஞ்சம் தயக்கம் காட்டிருக்கிறார். அதனால் அந்த படம் நடிகர் விஜய்க்கு கைமாறியதாம்.
நண்பன்:
நடிகர் விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நண்பன். இப்படத்தில் விஜய்யின் நடிப்பு அனைத்து ரசிகர்களாலும் பாராட்டப்பட்டதோடு, கல்லூரியில் மாணவராக அவர் செய்யும் சேட்டைகள் பலராலும் ரசிக்கவும் பட்டது. ஹிந்தியில் வெளிவந்த 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் ஆன இதில் விஜய்யுடன் இணைந்து ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் முதல் முறையாக நடித்திருந்ததோடு, வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றிருந்து. இருப்பினும் முதன்முதலில் ஷங்கர் மகேஷ்பாபுவிடம் தான் நண்பன் படத்தின் கதையை கூறி விஜய் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டிருந்தாராம். அப்போது பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக படத்தில் நடிக்க மகேஷ்பாபு மறுத்துள்ளார். பின்னர் நடிகர் சூர்யாவிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, அதுவும் கை கூடாமால் போகவே இறுதியாக நடிகர் விஜய்யிடம் சென்று ஓகே வாங்கி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
துப்பாக்கி:
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'துப்பாக்கி. அதுவரை சட்டைக்கு மேல் சட்டை போட்டுக் கொண்டு பஞ்ச் வசங்களை பேசி வந்த விஜய்யை முதன் முதலில் இந்த படத்தில் தான் ஒரு மிலிட்டரி மேன் ஆக நடிக்க வைத்து எதிரிகளை துவம்சம் செய்ய வைத்திருந்தார் ஏ.ஆர் முருகதாஸ். கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியை விஜய்க்கு பெற்று தந்த இந்த படத்தில் முதலில் நடிக்கும் வாய்ப்பு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு தான் கிடைத்ததாம். அப்போது துப்பாக்கி கதையை கேட்டு ஓகே சொன்ன அக்ஷய் குமார், பின்னர் சில காரணங்களால் அந்த படம் எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டதால், அதன் பின்னர் சூர்யாவிடமும் கதை சொல்லி அவரும் தட்டிக் கழித்துள்ளார். பிறகு விஜய்யிடம் அந்த கதையை கூறி ஓகே செய்த முருகதாஸ், அந்த படத்தை முதலில் தமிழில் விஜய்யை வைத்து முடித்து விடுகிறேன் என்று அக்ஷய் குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவிக்கவே துப்பாக்கி படத்தை விஜய்யை வைத்து முதலில் தமிழில் எடுத்து முடித்தார் ஏ.ஆர் முருகதாஸ். அந்த படம் தமிழில் ஹிட்டாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்தது, அதற்கும் பிறகு 2 ஆண்டுகள் கழித்தே துப்பாக்கி படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து 'ஹாலிடே' என்ற பெயரில் எடுத்தார் ஏ. ஆர். முருகதாஸ்.