71வது பிறந்தநாள் - தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின்!
தன்னுடைய 71வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்களை சந்தித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை பல்வேறு பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவிடத்தில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேக் வெட்டி கொண்டாடினார். முதலமைச்சர் அவரிடம் வாழ்த்து பெற்றார்.
இதையும் படியுங்கள் : சொந்த நிறுவனத்தை தொடங்குகிறாரா லீ ஜே வூக்? - காதலை உறுதிப்படுத்திய நிலையில் வெளியான புதிய தகவல்!
பின்னர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை, புத்தகங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மாவட்டம்தோறும் முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை திமுக மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.