Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

70 ஆண்டு கால திராவிட அரசியல் 15 நாளில் சுக்கு நூறானது - அண்ணாமலை பேட்டி!

08:41 PM Dec 19, 2023 IST | Web Editor
Advertisement

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, 70 ஆண்டுகால திராவிட அரசியல் 15 நாளில் சுக்குநூறாக உடைந்தது என தெரிவித்தார்.

Advertisement

தென் மாவட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க விமானம் மூலம் மதுரைக்கு வந்த அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது,

"தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பு அதிகமாக இருப்பதால், பாஜக எம்எல்ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்கள். இந்தச் சூழலில் முதலமைச்சர் இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக, டெல்லிக்குச் சென்றிருக்கிறார். அவர் மட்டும் செல்லாமல் கட்சியின் மூத்த நிர்வாகிகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

மழை வெள்ளத்தால் தென் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் எதையும் கண்டுகொள்ளாமல் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்குச் சென்றது, தமிழ்நாட்டு மக்களிடம், குறிப்பாக தென் மாவட்ட மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்பதுபோல் ஊடகங்களில் செய்தி வெளியிடுகிறார்.

இந்த 15 நாள்களில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால்  திமுக அரசின்மீது, மக்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். இந்தக் கோபம் 2024 தேர்தலில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும். பேரிடர் போன்ற விஷயங்களில் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். வெள்ளம் பாதித்த இடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் செல்லாமல், அவர் மகன் உதயநிதி ஸ்டாலினை அனுப்பிவைத்திருக்கிறார்.

பேரிடர் காலங்களில் நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த அனுபவமும் இல்லாத அவரை, களத்தில் இறக்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். நிதியமைச்சரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தனது படத்தை இயக்கிய மாரி செல்வராஜுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தன்னுடைய ஆய்வுக்கெல்லாம் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆக்சன் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.

அனுபவமுள்ள மூத்த  அமைச்சர்களான துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்றவர்களை அனுப்பாமல் பேரிடர் பற்றி அனுபவம் இல்லாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்யச் சொன்னது, தென் மாவட்ட மக்களிடம் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. நீர் வழிப்பாதைகளில் மணல் கொள்ளை அடித்ததுதன் விளைவுதான், இந்தப் பேரிடர். தமிழ்நாட்டு மக்கள் இரண்டு ஆண்டுக்கால திராவிட ஆட்சியைப் பார்த்து விட்டார்கள், திராவிட அரசியலின் அஸ்திவாரம் 15 நாள்களில் உடைந்துவிட்டது.

வெள்ளம் பாதித்த 24 மணி நேரத்துக்குள் மத்திய அரசு ஐந்து ஹெலிகாப்டர்கள், 30-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அனுப்பி, மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. வடக்கு, தெற்கு என்று இவர்கள்தான் பேசி வருகிறார்கள். ஆனால் காப்பாற்ற வந்த வீரர்கள் எந்தப் பாகுபாடும் பார்க்கவில்லை. நிதி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கும்போது மத்திய அரசு, வேண்டாம் என்றால் ஒன்றிய அரசு சென்று பேசி வருகிறார்கள்.

வருகின்ற 21-ம் தேதி தெரியும், அமைச்சர் பொன்முடி வழக்கின் தீர்ப்பு. பெரியமழை பெய்து வரும்போது நெல்லை மேயர், உதயநிதி ஸ்டாலினுடன் இளைஞர் அணி மாநாடு குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார். கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு என்ன அவசரம். தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்போது, இது அவசியமில்லாத ஒன்று. கூட்டணியில் மிகப்பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் முதல்வர், வெள்ள பாதிப்புக்காக கூட்டத்தைத் தள்ளிவைக்க மாட்டாரா?

70 ஆண்டுக்கால திராவிட அரசியல் சரிந்துவிட்டது. இந்த பாதிப்பையே கட்டுப்படுத்த முடியாதவர்கள், இதைவிட பெரிய பாதிப்பு ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவார்கள்? வானிலை ஆய்வு மையத்தால் மழை எவ்வளவு பெய்யும் என்பதைத்தான் குறிப்பிட முடியுமே தவிர, எந்த அளவு பெய்யும், எந்த அளவு பாதிப்பு இருக்கும் என்று கணக்கு கூற முடியாது.

இதனால்தான் பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூப்பர் கம்ப்யூட்டருடன் நவீன வானிலை ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். அவரை இலாகா மாற்றிய பின்பு நவீன வானிலை ஆய்வு மையத்துக்கான 10 கோடி ரூபாய் என்ன ஆனது என்று தெரியவில்லை" 

இவ்வாறு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags :
Heavy rainfallheavy rainsKanyakumari RainsNellai FloodsNews7Tamilnews7TamilUpdatesrainfallSouth TN RainsTamilnadu RainsTenkasi RainsThoothukudiThoothukudi Rains
Advertisement
Next Article