பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்..
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு ஜப்பான் கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டானாவ் பகுதிக்கு அருகில் நேற்று இந்திய நேரப்படி இரவு 08:07 மணி அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனை EMSC உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் தென்மேற்கு ஜப்பான் கடற்கரை பகுதியை சுனாமி தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் சுனாமி அபாயம் தற்போது கடந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் சில இடங்களில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 63 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகிறது. இந்த நிலநடுக்கம் சுமார் 4 நிமிடங்களுக்கு மேல் உணரப்பட்டதாகவும், சக்தி வாய்ந்தது எனவும் அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, மேடான பகுதிகளுக்கு சென்றதாகவும், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்த விவரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளன.