6ம் கட்ட தேர்தல் - ஜனநாயக கடமையாற்றிய நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்!
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் ஆகிய இருவரும் புவனேஸ்வரில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது.
6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 25) நடைபெற்று வருகிறது. 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அதன்படி, 6ம் கட்ட வாக்குப்பதிவு பீகார் (8), ஜார்கண்ட் (4), ஜம்மு காஷ்மீர் (1), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), ஹரியானா (10) மற்றும் டெல்லி (7) ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் 6 மக்களவைத் தொகுதிகளோடு, 42 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஒடிசா முதலமைச்சரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக், புவனேஸ்வரில் தனது இல்லத்திற்கு அருகில் ஏரோட்ரோம் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு நடந்து சென்று வாக்களித்தார். அதே போல முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவருமான வி.கே.பாண்டியனும் புவனேஸ்வரில் உள்ள வாக்குச் சாவடிக்கு ஆட்டோவில் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.