பீகார் முதற்கட்ட தேர்தலில் 65.08% வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
பீகார் சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 121 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயதானவர்கள் ஆவர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக 64.66 சதவீத வாக்குகள் பதிவானதாக குறிப்பிடப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட வாக்குப்பதிவு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் மாநிலத்தின் சராசரி வாக்குப்பதிவு 57.29 சதவீதமாகவும், கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் 56.28 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.