கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு - குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்!
கோவாவின் ஸ்ரீகாவோவில் உள்ள லைராய் தேவி கோயிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கோவாவின் பிரபல புனித யாத்திரைத் தலமான லைராய் தேவி கோயிலில் ஆண்டுதோறும் மே மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில் நடக்கும் தீமிதி சடங்கை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். அந்த வகையில் இந்தாண்டு நடத்தப்பட்ட இந்த திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், மருத்துவமனைக்குச் சென்று காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். சுமார் 1,000 போலீசார் பணியில் இருந்த நிலையிலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இயலவில்லை. கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"கோவாவின் ஷிர்காவ் நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "கோவாவின் ஷிர்காவ் நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.