டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட் - இந்திய வீரர் அஸ்வின் சாதனை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் அதிவேகமாக 500 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இதுவரை 279 போட்டிகளில் விளையாடி மொத்தம் 727 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். விசாகப்பட்டணத்தில் நடந்த 2வது டெஸ்ட்போட்டியுடன் 499 விக்கெட்டுகள் எடுத்திருந்த அஸ்வின், தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை ராஜ்கோட்டில் தற்போது நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அதன்படி குஜராத் ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் 2வது நாளில், இங்கிலாந்து வீரர் ஸாக் க்ராலியின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். இதன்மூலம் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் மற்றும் ஒன்பதாவது சர்வதேச பந்துவீச்சாளராக அஸ்வின் வரலாற்றில் பெயர் பதித்துள்ளார்.
அஸ்வினுக்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் (800 விக்கெட்டுகள்) மற்றும் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் (517 விக்கெட்டுகள்) ஆகிய ஆஃப் ஸ்பின்னர்கள் இந்தப் பட்டியலில் ஏற்கனவே உள்ளனர்.