நாடாளுமன்றத்தில் புகை குப்பிகளை வீசிய 5 பேர் கைது! -யார் இவர்கள்? பின்னணி என்ன?
நாடாளுமன்ற வளாகம் மற்றும் மக்களவைக்குள் அத்துமீறலில் ஈடுபட்டவர்களிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்ன காரணத்திற்காக இந்த செயலில் ஈடுபட்டார்கள் ?
டெல்லி புதிய நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் புகை குப்பிகளை வீசி ரகளையில் ஈடுபட்ட அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒரு பெண் உள்ளிட்ட இருவர், வண்ண புகை உமிழும் குப்பிகளை கையில் ஏந்தியபடி "பாரத் மாதாகி ஜெ", "சர்வாதிகாரம் ஒழிக", "ஜெய் பீம்", "ஜெய் பாரத்" என்றவாறு கோஷமிட்டனர். அவர்களையும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் கைது செய்து அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரையும் அழைத்துச் சென்றனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ரகளையில் ஈடுபட்டவர்கள், ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியைச் சேர்ந்த நீலம், மகாராஷ்டிர மாநிலத்தின் லத்தூர் பகுதியைச் சேர்ந்த அமோல் ஷிண்டே என்பது தெரியவந்துள்ளது. அதேபோல மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் சர்மா, கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த மனோ ரஞ்சன் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த அத்துமீறலுக்கு மூளையாக செயல்பட்டவர் சாகர் சர்மா என டெல்லி காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு வெளியே கோஷமிட்டபடி ரகளையில் ஈடுபட்ட நீலம் என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றபோது அவர், "நாங்கள் எந்த இயக்கங்களையும் சேர்ந்தவர்கள் இல்லை, நாங்கள் அனைவரும் வேலையில்லாத பட்டதாரிகள்தான். தங்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும்போது, அரசு தங்களை ஒடுக்கி சிறையில் தள்ளப் பார்க்கிறது" என அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
மக்களவைக்குள் நுழைந்த இருவரும் மைசூர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர், பிரதாப் சிம்ஹா பெயரில் அளிக்கப்பட்ட பாஸ் மூலமே பார்வையாளர்கள் மாடத்திற்குள் சென்றதாக எதிர்கட்சி எம்பி தானிஷ் அலி தகவல் தெரிவித்திருந்தார். சாமுண்டீஸ்வரி தொகுதி எம்பி-யான பிரதாப் சிம்ஹா அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளர். தனது எழுத்துக்கள் மூலம் ஹிந்துத்வா அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த இவர், 2008 ஆம் ஆண்டு "நரேந்திர மோடி: யாரு துலியாடா ஹாதி" என்ற பெயரில் பிரதமரின் வாழ்க்கை சரித்திரம் குறித்த புத்தகம் ஒன்றை எழுதி புகழ் பெற்றார். 2014 ஆம் ஆண்டு அரசியலில் குதித்த அவருக்கு கர்நாடக பாஜக-வின் இளைஞர் அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
கைதானவர்களில் ஒருவரான மைசூரை அடுத்த பெரியபாட்டனா பகுதியைச் சேர்ந்த மனோ ரஞ்சன் என்பவர் பொறியியல் பட்டதாரி என்பது தெரியவந்த நிலையில், மைசூரில் உள்ள அவரது தந்தை தேவராஜிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது தேவராஜ் தனது மகன் நல்லவன், சமூக அக்கரை கொண்டவன் எனவும், அவரது செயல் கண்டிக்கக் கூடியதுதான் என்றாலும், அவரை நிச்சயமாக யாரோ மூளைச்சலவை செய்துள்ளனர் என விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.