டிஎன்பிஎஸ்சி-க்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம்!
டிஎன்பிஎஸ்சி-க்கு 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து உள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இதற்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி, தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்யும். தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்யும் உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கப்பட்டு நியமிக்கப்படுவார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும். இதில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப, 5 புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை செய்தது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அவர்கள் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவனருள், ஐஆர்எஸ் அதிகாரி சரவண குமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார், முனைவர் பிரேம் குமார் ஆகிய 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்கள் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவி வகிப்பார்கள் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.