திருவள்ளூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பொன்னேரியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.1,166 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.418.15 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரத்து 760 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.390.74 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் ரூ.357.43 கோடி மதிப்பில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 531 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், "கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் தண்டலம் - கசவநல்லத்தூர் சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20.37 கோடியில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும்.
திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் மணவூர் - இலட்சுமி விலாசபுரம் சாலையில் கொசஸ்தலையாறு ஆற்றின் குறுக்கே ரூ.23.47 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில் தாமரைக்குளம் மேம்படுத்தும் பணிகள் ரூ.2.27 கோடியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும்.
பழவேற்காடு பகுதியில் சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும்; அங்குள்ள வைரவன்குப்பம் மீனவ கிராமத்தில் வலை பின்னும் கூடம் அமைக்கப்படும்.
திருமழிசை - ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடியில் அகலப்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.