4-வது டி20 போட்டி - பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி!
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி இன்று (ஜன.19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ரிஸ்வான் 90 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் வெஹன்றி, பெர்குசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையும் படியுங்கள்: “பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை?” – வைரலாகும் சமந்தாவின் பதிவு!
இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆலென் 8 ரன்னிலும், செய்பர்ட் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய வில் யங்கும் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்து சென்றனர்.
நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெறச்செய்தனர். 18.1 ஓவர்களில் இலக்கை எட்டிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி ஜன.21-ம் தேதி நடைபெற உள்ளது.