மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 4986 #RedEaredSlider ஆமைகள் பறிமுதல்!
கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 4986 ஆமைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, கடந்த செப்.27ஆம் தேதி சென்னைக்கு விமானம் மூலம் 4986 தடை செய்யப்பட்ட ஆமைகள் கடத்தி வரப்பட்டுள்ளன. இதனை விமான நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட ஆமைகளில் 4967 சிவப்பு காது ஆமைகளும், 19 அல்பினோ சிவப்பு காது ஆமைகளும் உள்ளன.
சிவப்பு காதுகள் கொண்ட ஸ்டைலர் ஆமைகள்
அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த சிவப்புக் காது ஆமைகளின் அறிவியல் பெயர் Trachemys Scripta Elegans. இந்த ஆமைகள், செல்லப்பிராணி பிரியர்களிடையே மிகவும் பிரபலம், குறிப்பாகச் சிறுவர்களிடத்தில். அதற்குக் காரணம், இதன் வண்ணமும், இதன் சிறிய தோற்றமும். ஆனால், இந்த ஆமைகள் நம் நாட்டின் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்காது.
இந்த ஆமைகள், விரைவில் முதிர்வடையும் தன்மையுடையவை. அளவில் சிறியதாக இருந்தாலும், வேகமாக வளரும். இனப்பெருக்கமும் அதிகம். முரட்டுத்தனமானவையும் கூட. இவை அதிக அளவில் பெருக்கம் அடைந்தால், இந்தியாவைச் சேர்ந்த ஆமைகளின் வாழ்விடம், இனப்பெருக்க சூழ்நிலை மற்றும் உணவு ஆகியவற்றை இந்த ஆமைகள் அபகரித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். அது இந்திய உயிர்களின் சுற்றுச்சூழலை பாதிக்கும்.
இதனால் இந்த ஆமைகளை இந்தியாவிற்குள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கண்டறிபவர்கள் அருகாமை வன உயிரின சரணாலயத்தில் அவற்றை ஒப்படைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரும் போது கைப்பற்றப்பட்ட ஆமைகள் வண்டலூர் பூங்காவில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன.