“77 தமிழக மாணவர்களை வங்கதேசத்திலிருந்து தமிழகம் அழைத்துவர ஏற்பாடு” - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி!
முதல் கட்டமாக 49 மாணவர்கள் வங்கதேசத்திலிருந்து தமிழகம் அழைத்துவரப்பட்டநிலையில் இன்று மேலும் 77 மாணவர்கள் தமிழகம் வர உள்ளனர் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அங்கு கல்வி பயின்று கொண்டிருக்கும் இந்திய மாணவா்கள் உடனடியாக இந்தியா திரும்பும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவா்களை மீட்டு தமிழகம் அழைத்து வர மாநில அரசின் சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல்கட்டமாக கிருஷ்ணகிரி மாணவா்கள் 12 போ், கடலூா் மாணவா்கள் 6 போ், தருமபுரி, தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்த தலா 5 மாணவா்கள், சேலத்தைச் சோ்ந்த 3 மாணவா்கள், வேலூா், ராணிப்பேட்டை, மதுரை, சென்னை, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த தலா 2 போ், ஈரோடு, திருவள்ளூா், விழுப்புரம், தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 49 மாணவா்கள் கொல்கத்தா, குவாஹாட்டி, அகா்தலா ஆகிய நகரங்களின் வழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணியளவில் சென்னை வந்தடைந்தனா்.
அவா்களை விமான நிலையத்தில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வரவேற்றாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, முதல்கட்டமாக 49 மாணவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனா். சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வருவதற்கான பணியை அயலகத்துறை மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களின் பெற்றோருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பாதுகாப்பான இடம், உணவு ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முழுமையான பட்டியல் கிடைத்த பிறகு அவர்களை தமிழகம் அழைத்து வரும் பணிகளும் துவங்கும். தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து வருகிறோம் அயலகத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் இந்திய தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு உதவி செய்து வருகிறார்கள்.
நாளை (22-07-2024) 77 மாணவர்கள் தமிழகம் வர உள்ளனர். மாணவர்களுக்கு விமான கட்டணம் முதல் அவர்கள் இல்லம் வரை சென்று சேருவதை நமது துறை செயல்படுத்தி வருகிறது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்கள் ஐலக தமிழர் நல வாரியத்தில் பதிவு
செய்துள்ளார்கள், தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் அவர்களைப் பாதுகாப்பாகத்
தமிழகம் அழைத்து வருவது தான் முக்கியம், அவர்களின் கல்வி தொடர்வது பற்றி
கேட்டு அறிந்திருக்கிறோம், அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது எனவே
காலப்போக்கில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.