உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் 47 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்!
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மணா என்ற கிராமத்தில் இன்று(பிப்.28) காலை 8 மணி அளவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு சாலைப் பணிகளை செய்து வந்த 57 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய மீட்பு படையினர் பனிச்சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளநிலையில், அங்குள்ள ராணுவ முகாமிற்கு அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே இந்திய வானிலை மையம் உத்தரகாண்ட் மற்றும் அப்பகுதியில் உள்ள மலைப் பிரதேசங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, “பனிச் சரிவில் தொழிலாளர்கள் சிக்கிய சோகமான செய்தி எனக்கு கிடைத்தது. மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கி இருப்பவர்களுக்காக பிராத்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.