Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒரே நாளில் 417 பில்லியன் வினாடிகள் பயன்பாடு - X சமூக வலைதளம் புதிய சாதனை!

08:08 AM Jul 16, 2024 IST | Web Editor
Advertisement

ஒரே நாளில் 417 பில்லியன் வினாடிகள் எக்ஸ் வலைத்தளத்தை பயனாளர்கள் பயன்படுத்தியதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4,400 கோடி டாலருக்கு (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டரை வாங்கினார். கடந்த அக். 27-ம் தேதி இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து எலான் மஸ்க் வசம் ட்விட்டர் வந்தது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்தே தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தன.

ட்விட்டருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வந்த நிலையில் அதற்கு முதலில் சுதந்திரம் அளிக்கவிருப்பதாகக் கூறிய எலான் மஸ்க், ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி உள்பட முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளை நீக்கினார். இது அதிரடி மாற்றமாகப் பார்க்கப்பட்டது. தொடர்ந்து, பயன்படுத்தப்படாத ட்விட்டர் கணக்குகளை நீக்கியதுடன், அதுவரை இலவசமாக பயன்படுத்திவந்த ட்விட்டர் கணக்குகளுக்கு கட்டணம் நிர்ணயித்தார்.

அதிகாரபூா்வ கணக்குக்கான ‘புளூ டிக்’ அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சந்தா செலுத்தும் முறையை அறிமுகம் செய்து பயனாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதேபோல ட்விட்டர் என்றாலே 'நீலக்குருவி' என்ற அடையாளத்தையே மாற்றினார் மஸ்க். மேலும் ட்விட்டருக்குப் பதிலாக 'X' (எக்ஸ்) என்றும் பெயரை மாற்றினார். இது ட்விட்டர் பயனாளர்களிடையே பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

கடந்த ஓராண்டில் ட்விட்டரின் பயன்பாடு, வர்த்தகம் மற்றும் அதன் நம்பகத்தன்மை குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நன்கு பயன்பாட்டில் இருந்த ட்விட்டர் இந்த ஓராண்டில் பல குறைகளுடன் முழுமையற்றதாக இருப்பதாக பயனாளர்கள் தெரிவித்தனர்.

2023ம் ஆண்டில் எந்தவொரு முன்னேற்றத்தையும் மஸ்க் ஏற்படுத்தவில்லை என்றும் பயனர்கள், விளம்பரதாரர்களிடம் X அதன் மதிப்பை இழந்து வருவதாகவும் இன்சைடர் இன்டலிஜென்ஸ் ஆய்வாளர் ஜாஸ்மின் என்பெர்க் தெரிவித்திருந்தார்.  மேலும் எலான் மஸ்க் கைவசம் வந்த பின்னர் ட்விட்டரில் தவறான தகவல்கள் அதிகம் பரப்பப்படுவதாக பல்வேறு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 417 பில்லியன் வினாடிகள் எக்ஸ் வலைத்தளத்தை பயனாளர்கள் பயன்படுத்தியதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் 93 பில்லியன் விநாடிகள் எக்ஸ் வலைத்தளத்தை பயனாளர்கள் பயன்படுத்தியதாகவும்,அது முந்தைய சாதனையான 76 பில்லியன் என்பதை விட 23 சதவீதம் அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags :
elon muskTesla CEO Elon MuskTweetDeckTwitterTwitterXXX Social Media
Advertisement
Next Article