கனமழையால் சேரன்மகாதேவியில் வாழைகள், நெற்பயிர்கள் நாசம் - கள ஆய்வு பணியில் அரசு அதிகாரிகள் மும்முரம்!
சேரன்மகாதேவியில் மழை வெள்ளத்தில் சுமார் 40 ஆயிரம் வாழைகள் மற்றும் 600 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. விவசாயிகள் உரிய ஆவணத்தை அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 16-ம் தேதி இரவு முதல் டிச.18-ம் தேதி வரை கனமழை பெய்தது. மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை மற்றும் சேரன்மகாதேவி பகுதிகளில் அதிக அளவு வாழைகள், நெற்பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். குறிப்பாக சுமார் ஆயிரம் வாழைகள் மற்றும் 600 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் நெற்பயிர்கள் குறித்து வருவாய் துறையினர், வேளாண்மை துறையினர் கள ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப்படையில் சேத மதிப்பீடு பட்டியல் தயார் செய்து வருகின்றனர். மதிப்பீடு முடிந்த பின்னர் முழு சேதம் குறித்து அறிக்கை தயார் செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.