இந்திய பணியாளர்களுக்கான விசா 4 மடங்கு அதிகரிப்பு: #Germany அரசு முடிவு!
திறன்மிகு இந்திய பணியாளர்களுக்கான விசா எண்ணிக்கையை ஆண்டொன்றுக்கு 20,000 என்பதில் இருந்து 90,000-ஆக அதிகரிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஜெர்மனி இடையிலான 7வது உயர்நிலை பேச்சுவார்த்தை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் நேற்று முன்தினம் (அக். 24) வந்தடைந்தார். டெல்லியில் நேற்று (அக். 25) நடைபெற்ற உயர்நிலை பேச்சுவாா்த்தையில் பிரதமர் மோடி தலைமையில் இந்திய குழுவினரும், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் தலைமையில் அந்நாட்டின் குழுவினரும் பங்கேற்றனர்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு, ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை அடையாளம் காண்பது குறித்தும், பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த விவகாரமும் இப்பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஒப்பந்தத்தைப் பெற ஜெர்மனியின் தைசென் குரூப் மரைன் சிஸ்டம்ஸ், ஸ்பெயின் நாட்டின் நவான்டியா நிறுவனங்கள் இடையே போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, ‘உக்ரைன், மேற்கு ஆசியப் போர்களுக்கு அரசியல்ரீதியில் தீர்வுகாண பிரதமர் மோடி இணைந்து பணியாற்ற வேண்டும்’ என ஒலாஃப் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி, “உக்ரைன், மேற்கு ஆசியாவில் நடந்துவரும் போர்கள் பெரிதும் கவலையளிக்கின்றன. எந்தவொரு பிரச்னைக்கும் போர் தீர்வல்ல என்பதே இந்தியாவின் கண்ணோட்டம். அமைதியை மீட்டெடுக்க சாத்தியமான அனைத்துப் பங்களிப்பையும் நல்க இந்தியா தயாராக உள்ளது” என தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே 18 ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள் கையொப்பமிடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டன. குற்ற விவகாரங்களில் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கு வகைசெய்யும் ‘பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம்’, ரகசியத் தகவல்கள் பாதுகாப்பு மற்றும் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம், திறன் மேம்பாடு, தொழில்கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான ஒப்பந்தம், மாணவா்கள் இரட்டைப் பட்டப் படிப்பை மேற்கொள்ள வகைசெய்யும் சென்னை ஐஐடி-ஜெர்மனியின் திரெஸ்டன் பல்கலைக்கழகம் இடையிலான ஒப்பந்தம் உள்ளிட்டவை கையொப்பமாகின.