தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன் #TVK மாநாடு… குழப்பத்தில் ரசிகர்கள்!
தவெக முதல் மாநாட்டிற்கு அடுத்த 4 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் குறித்த தேதியில் மாநாடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப். 23ம் தேதி நடைபெற இருந்த நிலையில், அக்.27ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த 4 நாட்களில் அதாவது அக்.31 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக இதுபோன்ற நாட்களில் பொதுமக்கள் பண்டிகை நினைவில் தான் இருப்பார்கள். தீபாவளி பண்டிகையை சொல்லவே தேவை இல்லை. இதற்கெல்லாம் 15, 20 நாட்களுக்கு முன்பாகவே ரெடியாக ஆரம்பித்து விடுவார்கள். புது துணிகள் எடுப்பது, பலகாரம் செய்ய ரெடியாவது போன்ற வேலைகளில் இருப்பார்.
இதுபோன்ற பண்டிகை நாட்களில் வியாபாரம் அள்ளும். குறிப்பாக ஜவுளிக் கடைகள், பட்டாசுக் கடைகளில் கூட்டம் அலைமோதும். இந்த நாட்களில் பலரும் வீதிகளில் துணிக்கடைகள், பட்டாசுக் கடைகள் வைப்பது உண்டு. இதில் விஜய் ரசிகர்களும், தவெக கட்சித் தொண்டர்கள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. தீபாவளிக்கு 4 நாட்கள் இருக்கும் நேரத்தில் தீபாவளி வேலைகளையும், பிழைப்பையும் விட்டுவிட்டு மாநாட்டில் கலந்துக் கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தீபாவளியை எண்ணி மாநாட்டிற்கான தேதி மாற்றப்படுமா? அல்லது அதே தேதியில் நடைபெறுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.