Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒரே ஒரு வாக்குக்காக 39 கி.மீ. சுமந்து செல்லப்பட்ட வாக்கு எந்திரம்.. ஜனநாயகக் கடமையாற்றிய ஒற்றைப் பெண்... கவனம் ஈர்த்த தேர்தல் ஆணையம்...

09:34 PM Apr 19, 2024 IST | Web Editor
Advertisement

அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரே ஒரு பெண்ணுக்காக 39 கி.மீ. தொலைவில் உள்ள ஊருக்கு வாக்கு எந்திரம் தூக்கிச்செல்லப்பட்டு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19-ம் தேதி ) தொடங்கியது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அனைத்து பகுதிகளிலும் காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. தமிழகம் போன்று இந்த மாநிலத்திலும் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் 2,226 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.  இதில் 228 மையங்களை தோ்தல் அதிகாரிகள் நடந்து மட்டுமே சென்றடைய முடியும். அந்த அளவிற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு சவால் நிறைந்த பணி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.

சீன எல்லையொட்டிய அருணாச்சலப் பிரதேசம் கடுமையான நிலப்பரப்புகளைக் கொண்டதுடன், 61 வாக்குப்பதிவு மையங்களுக்கு 2 நாள்களும், 7 மையங்களுக்கு 3 நாள்களும் கால் நடையாக நடந்து செல்ல வேண்டியிருக்கும். தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களின் ஜனநாயக உரிமையையும் உறுதிபடுத்த தேர்தல் ஆணையம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அந்த வகையில், மாநிலத்தின் மலோகாம் கிராமத்தைச் சேர்ந்த 44 வயதான 'சோகேலா தயாங்' எனும் ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக இந்த முறையும் வாக்குப்பதிவு மையம் அவரது கிராமத்தில் அமைக்கப்பட்டது.

சோகேலா தயாங்' தவிர மற்ற அனைவரும் வேறு வாக்குப்பதிவு மையத்துக்கு தங்கள் வாக்கினை மாற்றிக் கொண்டுவிட்டனர். தொடர்ந்து, சோகேலா தயாங் ஒருவருக்காக மட்டும் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

'சோகேலா தயாங்' வாக்களிப்பதற்கு தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் சுமை தூக்கும் தொழிலாளிகள் உள்ளிட்ட குழுவினர் 39 கிலோ மீட்டர் கடும் நிலப்பரப்பில் நடந்து சென்று, மலோகாம் கிராமத்தில் வாக்குப்பதிவு மையம் அமைத்தனர். சேகோலா தயாங் எப்போது வாக்களிக்க வருவார் என்பது உறுதியாகத் தெரியாத காரணத்தால் வாக்குப்பதிவு மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முழு நேரமும் செயல்படும்படி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சோகேலா தயாங் தனது வாக்கை மலோகாம் கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் செலுத்தினார். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “அருணாச்சலப்பிரதேசத்தின் மாலோகம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு வெற்றிகரமாக முடிந்தது. மாலோகம் வாக்குச் சாவடியின் தனி வாக்காளர் சோகேலா தயாங் (44) வாக்களித்தார்” என பதிவிட்டுள்ளது.

கிழக்கு அருணாச்சல் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் தற்போதைய எம்.பி. தபிர் கௌ மீண்டும் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் சார்பில் போசிராம் சிராம் நிறுத்தப்பட்டுள்ளார். அருணாசல பிரதேசத்தில் 44 வயது ஒற்றைப் பெண் வாக்காளருக்காக தேர்தல் அதிகாரிகள் குழு 39 கிலோ மீட்டர் கடுமையான நிலப்பரப்பில் நடந்து சென்று, மலோகாம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைத்தது நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

Tags :
2024 ElectionsArunachal PradeshECIElection commissionElection2024Elections With News 7 TamilFirst PhaseLok Sabha Elections 2024MalogamNEWS 7 TAMILNews 7 Tamil UpdatesParliament Election 2024Sokhela Tayangvoting day
Advertisement
Next Article