ஒரே நாளில் 354 திருமணங்கள் - களைகட்டிய #Guruvayur ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்!
கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 354 திருமணங்கள் நடைபெற்றுள்ளது.
ஆவணி மாதத்தில் அதிக அளவில் திருமணம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிறு என்பதால் இன்று குருவாயூரில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடந்ததால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குருவாயூரில் உள்ள பிரபலமான ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் இன்று ஒரே நாளில் 356 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் உலகிலேயே திருமணங்கள் அதிகம் நடைபெறும் கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது இக்கோயிலில் வைத்து திருமணம் செய்ய பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். திரை பிரபலங்கள் பலரும் குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துள்ளனர். இக்கோயிலில் திருமணங்கள் மட்டுமல்லாமல் சோறூனு எனும் கைக்குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் நிகழ்வும் இங்கு பிரபலமான ஒன்றாக அறியப்படுகிறது.
இக்கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் திருமணம் செய்வதற்காக நான்கு திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. திருமணங்கள் குறைவாக இருந்தால் ஒரு மண்டபம் மட்டுமே திருமணத்திற்காக திறக்கப்படும். அதிக திருமணங்கள் இருந்தால் மற்ற மண்டபங்கள் அதற்கேற்ப திறக்கப்படும். சாதாரண சுப நாட்களில் 50 முதல் 100 திருமணங்கள் நடக்கும். விஷேச முகூர்த்த நாட்களில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் இன்று ஒரே நாளில் 354 திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த 2017-ம் ஆண்டில் 227 திருமணங்கள் நடைபெற்றதே அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது. இன்று 363 திருமணங்களுக்கு முதலில் பதிவு செய்யப்பட்டதாகவும். இதில் 9 குழுக்கள் தேவஸ்தானத்திற்கு தெரிவிக்காததால் 354 திருமணங்கள் மட்டும் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.