பாம்பன் | வலையில் சிக்கிய 350 கிலோ யானை திருக்கை மீன் - மீனவர்கள் மகிழ்ச்சி!
பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் 350 கிலோ எடை கொண்ட யானை திருக்கை மீன் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்கு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த டிச. 26-ம் தேதி 90 விசைப்படகுகளில் 500க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். அப்போது வழக்கம் போல் மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு இன்று (டிச. 28) கரை திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கரை திரும்பிய மீனவர்களின் வலையில் நகரை, பாரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதே போல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்களின் வரத்து அதிகமாக இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி வலையில் 5 அடி அகலத்தில் 350 கிலோ எடை கொண்ட யானை திருக்கை மீனும் வெவ்வெறு எடையுடன் 4 சிறிய திருக்கை மீன்களும் கிடைத்துள்ளது.
இந்த திருக்கை மீன் மற்ற மீன்களை போல் இல்லாமல், முகம் இரண்டாக பிரிந்து கண்கள்
தனித்தனியாக யானை முகம் போல் பெரிய தோற்றத்துடன் உள்ளதால் இதனை 'யானை
திருக்கை' என மீனவர்கள் அழைக்கின்றனர். இந்த யானை திருக்கை மீனை கருவாடு செய்வதற்காக ஒரு கிலோ 55 ரூபாய் வீதம் மொத்தமாக 350 கிலோவை 19 ஆயிரம் ரூபாய்க்கு கேரள மீன் வியாபாரி ஒருவர் வாங்கி சென்றார். இதனால் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.