சபரிமலையில் 39 நாட்களில் 31.43 லட்சம் பேர் தரிசனம்: ரூ.204.30 கோடி வருவாய்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்கான 39 நாட்களில் 31.43 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும், கோயில் வருவாயாக ரூ.204.30 கோடி வசூல் கிடைத்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் இன்று (டிச.26) காலை சபரிமலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“சபரிமலைக்கு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 18 கோடி ரூபாய் வருமானம் குறைந்துள்ளது. மண்டல சீசன் துவங்கி 39 நாட்களுக்கு பிறகு மொத்த வருவாயாக ரூ.204 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.222.98 கோடி வருவாய் கிடைத்தது. ஏலம் மற்றும் சில்லறையாக பெறப்பட்ட நாணயங்களையும் எண்ணும்போது இந்த எண்ணிக்கை மாறும்.
நன்கொடையாக ரூ.63.89 கோடி கிடைத்துள்ளது. அரவண பிரசாதம் விற்பனை மூலம் ரூ.96.32 கோடி கிடைத்துள்ளது. அப்பம் விற்பனை மூலம் ரூ.12 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. மண்டல காலம் தொடங்கி நேற்று வரை 31,43,163 பேர் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். தேவசம் போர்டு அன்னதான மண்டபம் மூலம் நேற்று வரை 7,25,049 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.