நாதக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 3000 பேர் திமுகவில் இணைந்தனர்!
கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சீமான் மீது அதிருப்தி தெரிவித்து கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் பெரியார் குறித்து சீமான் பேசியது மேலும் அதிருப்தியை தர மேலும் பல நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறினர். கட்சியில் இருந்து விலகுபவர்கள் மாற்று கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் திமுகவிலேயே இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், நாதகவில் இருந்து விலகியவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மண்டல செயலாளர் - 1, மாவட்ட செயலாளர்கள் - 8, ஒன்றிய செயலாளர்கள் - 5, சார்பு அணி நிர்வாகிகள் - 9 தொகுதி செயலாளர்கள் - 6, எம் பி வேட்பாளர்கள் - 3, எம் எல் ஏ வேட்பாளர்கள் - 6 என மொத்தம் 2000 நாதக உறுப்பினர்களும், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 1000 பேர் என மொத்தம் 3000 பேர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுக. துண்டை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெரியார் சிலை பரிசாக அளித்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.