மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 300 மருத்துவ குழுக்கள் நியமனம்!
மிக்ஜாம் புயல் பாதித்த பகுதிகளுக்கு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 300 மருத்துவ குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. இதனால், வயிற்று போக்கு, காய்ச்சல், சேற்றுப்புண், உணவு ஒவ்வாமை, கிருமி தொற்று போன்ற பாதிப்புகளால், மக்கள் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, 300 நடமாடும் மருத்துவ குழுக்கள் நியமிக்கப்படும் என பொது சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.
அதன்படி,
சென்னை - 159 மருத்துவ குழுக்கள்
செங்கல்பட்டு - 60 மருத்துவ குழுக்கள்
திருவள்ளூர் - 51 மருத்துவ குழுக்கள்
காஞ்சிபுரம் - 30 மருத்துவ குழுக்கள்
என்ற கணக்கில் இந்த மருத்துவ முகாம்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில், மேலும் 7 நாட்களுக்கு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தேவைப்பட்டால், நிலைமைக்கு ஏற்றவாறு நடவடிக்கைகள் நீட்டிக்கப்படும் எனவும் பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்புதுறை தெரிவித்துள்ளது.