குவைத்தில் இருந்து கடல் வழியாக தப்பி மும்பை வந்த 3 தமிழக மீனவர்கள் - விஜய் வசந்த் எம்.பி. உதவியுடன் மீட்பு!
குவைத் நாட்டில் கொடுமைகளை அனுபவித்ததன் காரணமாக கடல் வழியே தப்பி மும்பை வந்த கன்னியாகுமரி, ராமநாதபுரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் எம்.பி. விஜய் வசந்த் உதவியால் மீட்கப்பட்டனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வளைகுடா நாடுகளில் வேலைகளுக்காகவும் மீன் பிடிக்கவும் சென்று அங்கு பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியை சேர்ந்த சகாய ஆண்டனி அனீஸ், ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த இன்பேன்ட் விஜய் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சார்ந்த நீடிஷோ ஆகியோர் குவைத் நாட்டிற்கு மீன்பிடித்தல் உட்பட பல்வேறு பணிகளுக்காக சென்றனர்.
இவர்களில் ஒருவர் 7 ஆண்டுகளும் மற்றொருவர் 2 ஆண்டுகளும் அங்கு பணிபுரிந்து வந்த நிலையில் உரிய ஊதியம் வழங்காமல் அவர்களுக்கு உணவு வழங்காமல் சித்திரவதை செய்ததால் வேறு வழியின்றி படகு மூலமாக மூன்று பேரும் தப்பி மும்பை வந்தனர். மும்பை கடற்கரையில் கடலோர காவல் படையினர் பிடித்து அவர்களை சிறையில் அடைத்தனர்.