Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“கொல்கத்தா காவல் ஆணையர் அதிரடி நீக்கம்” - #KolkataDoctorMurderCase-ல் மேற்கு வங்க அரசு நடவடிக்கை!

10:40 AM Sep 17, 2024 IST | Web Editor
Advertisement

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவரின் கொலையை கண்டித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவர்களின் 5 கோரிக்கைகளில் 3-க்கு மேற்கு வங்க அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என இளம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டமும் வெடித்தது. இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இதற்கிடையே இந்த கொலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு, இளம் மருத்துவர்கள் செப்.10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது. அவ்வாறு மருத்துவா்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் அரசு சாா்பில் துறை சாா்ந்த நடவடிக்கைகள் எடுப்பதை தடுக்க முடியாது எனவும் எச்சாிக்கை விடுத்தனர்.

ஆனால்  நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பயிற்சி மருத்துவர்கள் அறிவித்தனர். போராட்டமும் தொடர்ந்து வருகிறது. சுகாதார செயலாளரும், மருத்துவ கல்வி இயக்குநரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என கொல்கத்தாவில் உள்ள சுகாதாரத்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மருத்துவர்கள் நிபந்தனை விதித்திருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அதைச் செய்ய முடியாது என்று மேற்கு வங்க அரசு தெரிவித்தது. அதை ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள், தங்கள் நிபந்தனைகளை தளர்த்திக் கொண்டனர். பின்னர் பேச்சுவார்த்தையின் முடிவுகளை ஆவணமாக்கி இரு தரப்பும் அதில் கையொப்பமிட்டு நகலை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் மருத்துவர்கள் முன்வைத்தனர்.

இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட மேற்கு வங்க அரசு, மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நேற்று மீண்டும் அழைத்தது. இந்த அழைப்பை ஏற்று நேற்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி இல்லத்திற்கு 42 மருத்துவர்கள் சென்றனர். 2 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தையில், மருத்துவர்கள் முன்வைத்த 5 கோரிக்கைகளில், மூன்று நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி பேசியதாவது;

“மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் பதவியை ராஜிநாமா செய்ய ஒப்புக்கொண்டார். அவர் தனது பொறுப்பை நாளை (செப்.17 இன்று) மாலை 4 மணிக்கு புதிய காவல் ஆணையரிடம் ஒப்படைப்பார். அதற்கு முன்பாக, புதிய காவல் ஆணையரின் பெயர் அறிவிக்கப்படும். அத்துடன், மேற்கு வங்க காவல் துறை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கப்படும்.

மேற்கு வங்க மருத்துவப் பணிகள் இயக்குநர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர்களும் நீக்கப்பட்டு, அந்தப் பணியிடங்களில் புதிய நபர்கள் நியமிக்கப்படுவர். இதன் மூலம், மருத்துவர்கள் முன் வைத்த 5 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டும். பணிக்குத் திரும்பும் மருத்துவர்கள் மீது எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாது” என தெரிவித்தார்.

இருப்பினும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என இளம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது.

Tags :
Junior DoctorsKolkataMamata banerjeeWest bengal
Advertisement
Next Article