சென்னையில் 2வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்தாண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
“இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தமிழ் மொழி, தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, பண்பாடு, உயர்ந்த சிந்தனை, இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்.
தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர். வளம்பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
இதையும் படியுங்கள் : அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 - புதுமைப்பெண் திட்டத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியினைச் செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவைப் போற்றும் வகையில் கணித் தமிழ் மாநாடு 24 நடத்தியதும், தாய்த்தமிழை உயிர்ப்போடும் வனப்போடும் வளர்த்தெடுக்கும் திமுக அரசின் முயற்சிகளாகும்.
“இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சிந்தனைச் செயல்திறத்தோடு மாபெரும் அளவில் நடத்தப்படும்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த 2010-ம் ஆண்டு கோயம்புத்தூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சட் கருணாநிதி ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.