இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 : 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி..!
இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி முதலாவது டி20 போட்டி நடைபெற இருந்த நிலையில், இடைவிடாது பெய்த கனமழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.
இதனை அடுத்து நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் பூஜ்ஜியம் ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிங்கு சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரின் போது மழை குறுக்கிட்டதால், 19.3 ஓவர்களுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்திருந்தது.
இதையும் படியுங்கள் : Money Heist வீடியோவை பகிர்ந்து காங்கிரஸை விமர்சித்த பிரதமர் மோடி – காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!
மழை காரணமாக ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.