அகில இந்திய கூடைப்பந்து இறுதிப்போட்டி- பெண்கள் பிரிவில் கேரள அணி வெற்றி!
கரூரில் நடைபெற்ற 2வது அகில இந்திய அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து இறுதி போட்டியில் கேரளா மின்வாரிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் 2வது அகில இந்திய அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி கடந்த 7-ம் தேதி துவங்கியது. இந்த போட்டி தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்றது. இதில் கேரளா மின்வாரிய அணி, சென்னை வருமானவரித்துறை அணி, குவாலியர் ஐடிஎம் பல்கலைக்கழகம் அணி, சென்ட்ரல் ரயில்வே மும்பை அணி, சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத் அணி, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் சென்னை அணி உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொண்டன.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் அணியான கேரள அணிக்கு ரூ.50,000, இரண்டாம் பரிசு வெற்றி பெற்ற ஈஸ்டர்ண் ரயில்வே கொல்கத்தா அணிக்கு ரூ.40000, மூன்றாவது அணிக்கு ரூ.30000 வழங்கப்பட்டது. தொடர்ந்து, சுழற் கோப்பைகளை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.