வங்கதேசத்தில் முடிவுக்கு வந்த 26மணி நேர ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் - பயணிகள் நிம்மதி!
வங்கதேசத்தில் கடந்த வருடம் நடந்த மாணவர்களின் போராட்டத்தால், அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து இடைக்கால பிரதமராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில் சம்பள உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கதேச ரெயில்வே ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உரிய கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை ரயிலை இயக்கமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் யில் சேவை முடங்கியது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
வங்கதேச ரயில்வே ரன்னிங் ஸ்டாஃப் மற்றும் ஸ்ராமிக் கர்மாச்சாரி யூனியனின் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், டாக்காவில் செய்தியாளர்களை சந்தித்து வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார். மேலும் சந்திப்பில் ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.